இறுதி ஊர்வலத்தில் "நாட்டு வெடி" பறிபோன சிறுவனின் கண் பார்வை
சென்னையில் இறுதி ஊர்வலத்தில் வெடித்த நாட்டு வெடி சாலையோரம் நின்றிருந்த 14 வயது சிறுவனின் ஒருபக்கக் கண் பார்வையை பறித்துள்ளது.
சென்னை எம்ஜிஆர் நகர் பச்சையப்பன் தெருவைச் சேர்ந்த சந்தோஷ் என்ற அந்த சிறுவன், 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். வியாழக்கிழமை மாலை கல்லூரி சென்றிருந்த தனது சகோதரியை அழைத்து வருவதற்காக பச்சையப்பன் சந்திப்பு பகுதிக்குச் சென்றுள்ளார் சந்தோஷ். சாலையோர தேநீர் கடை அருகே அவர் நின்றிருந்தபோது அவ்வழியாக இறுதி ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது.
ஊர்வலத்தில் சென்றவர்கள் பெரும் ஒலியை எழுப்பும் தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகளை வெடித்தவாறு சென்றுள்ளனர். அந்த நாட்டு வெடிகளில் ஒன்றின் துரும்பு ஒன்று அதிவேகமாக பறந்து வந்து சந்தோஷின் இடது கண்ணை பலமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அலறித் துடித்த சந்தோஷை சுற்றி இருந்தவர்கள் மீட்டு எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சந்தோஷின் கண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அதில் பார்வை பறிபோய்விட்டதாகத் தெரிவித்துள்ளனர். பார்வை நரம்புகள் வரை சிதைந்துவிட்டதாகக் கூறிய மருத்துவர்கள், மாற்று கண் பொருத்தினாலும் பார்வை திரும்பாது என்றும் தெரிவித்தாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய் கதறி அழுதார்.
சிறுவன் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது தாயின் இறுதி ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட நாட்டு வெடி என்பது தெரியவந்தது.
இதையடுத்து குணசேகரன், சண்முகவேல், செல்வக்குமார் என 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வெடிபொருட்களை கவன குறைவாகவோ அலட்சியமாகவோ கையாள்வது, மற்றவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கையில் ஈடுபடுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இறுதி ஊர்வலங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகளைப் பயன்படுத்தும் வழக்கம் பரவலாக இருந்து வருவதாகவும் உரிய கண்காணிப்பை ஏற்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
Comments